நோட்டரி பப்ளிக் என்றால் என்ன ?

Internet Cafe

நோட்டரி பப்ளிக் என்றால் என்ன ?

இது குறித்து "The Notaries Act, 1952(53 of 1952)"  ல் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.

நோட்டரி பப்ளிக் ஆவதற்க்கு தேவையான தகுதிகள் என்ன ?

1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது

5. வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

7. நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

நோட்டரி பப்ளிக்காக பணி செய்ய விரும்புபவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, இந்த சட்டத்தின் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி அரசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள பிரிவு 5(a) ன்படி உரிமை உடையவர்கள் ஆவார்கள். அதேபோல் பிரிவு 5(b) ன்படி குறிப்பிட்ட காலத்திற்கு ( சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள்) பணியாற்ற அரசிடமிருந்து சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விதி எண் 8 ன்படி மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழை, குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க கொடுக்கப்படும் விண்ணப்பம், முதலில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரிவு 9 ன்படி மேற்படி சான்றிதழ் இல்லாமல் யாரும் நோட்டரி பப்ளிக்காக பணியாற்ற முடியாது.

நோட்டரி பப்ளிக்கின் பணிகள் பற்றி இந்த சட்டத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில பணிகளை கீழே கூறியுள்ளேன்.


1. எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்

2. எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit)

3. ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்

4. நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்

5. தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்

நோட்டரி பப்ளிக் தனது பணிகளை செய்யும் போது அவருக்குரிய முத்திரையை பயன்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும். "சான்றுறுதி அலுவலர் விதிகள் 1956" ன் விதி 12 ல் அந்த முத்திரை எந்த அளவில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அந்த முத்திரை 5 செ. மீ விட்டமுள்ள சாதாரணமான வட்டவடிவில் இருக்க வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக்கின் பெயர், பணியாற்றும் பகுதி, பதிவு எண், அவரை நியமனம் செய்த அரசு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 139 ல் நோட்டரி பப்ளிக்கால் சரிபார்த்து கையெழுத்து செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலம், நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297 லிலும் கூறப்பட்டுள்ளது.

Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top