ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை எனில் வங்கிகளுக்கு அபராதம் - இந்திய ரிசர்வ் வங்கி!
பெரும்பாலும் ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் பணம் இல்லை என்ற சிக்கலை பலரும் எதிர் கொண்டிருக்கலாம். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் இந்த சிக்கல் இருக்கும். வங்கிகள் அருகாமையில் அமைந்துள்ள ஏடிஎம் மையங்களில் சிக்கல் இருக்காது. பண்டிகை காலங்களில் பணம் இல்லாத இயந்திரங்களின் பட்டியலில் இதுவும் இணைந்து விடும்.
இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரங்களில் சரியாக பணத்தை நிரப்பவில்லை என்றால் வங்கிகளுக்கும், வொயிட் லேபிள் ஏடிஎம் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. 10 மணி நேரத்திற்கு மேல் பணம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும், இந்த விதிமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் பணம் இல்லை எனில் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு வேளை வொயிட்லேபிள் ஏடிஎம்-ல் பணம் இல்லை எனில் அந்த ஏடிஎம் மையத்துக்கு பணத்தை விநியோகம் செய்யும் வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட வங்கிகள் விரும்பினால் அந்த அபராத தொகையினை வொயிட்லேபிள் ஏடிஎம் நிறுவனங்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்.
வங்கி ஏடிஎம்களில் எவ்வளவு நேரம் பணம் இல்லை என்னும் தகவலை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும். எந்த பகுதியில், எந்த ஏடிஎம்-ல் பணம் இல்லை என விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வொயிட்லேபிள் ஏடிஎம்களுக்கும் இதே விதிமுறைதான்.
ஒவ்வொரு மாதமும் இந்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருகின்றது. அதனால் அக்டோபர் மாத தகவலை நவம்பர் மாதம் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலத்தில் உள்ள அதிகாரி இந்த அபராதத்தை விதிப்பார். அபராதம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் மண்டல இயக்குநரை அணுகலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
ஜூன் மாத இறுதியில் இந்தியாவில் 2.13 லட்சம் ஏடிஎம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.